states

img

ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் – ஆந்திர அரசு  

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களின் உடல்கள் இன்று காலை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர்” என்று தெரிவித்துள்ளது.

;